ஷா ஆலம், செப் 4- மின்சுடலைகளில் பணி நேரம் நீட்டிக்கப்பட்டதால் கோவிட்-19 நோய்த் தொற்றால் இறந்த முஸ்லீம் அல்லாதோர் உடல்களை தகனம் செய்வதில் ஏற்பட்ட தாமதப் போக்கு ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மாலை 4.30 மணியுடன் முடிவடையும் மின்சுடலைகளின் பணி நேரத்தை மாலை 6.30 மணி வரை நீட்டித்ததன் மூலம் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு காத்திருக்கும் காலம் ஒரு வாரத்திலிருந்து மூன்று அல்லது இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
மேலும், சிப்பாங்கில் கட்டப்பட்ட புதிய மின்சுடலை மற்றும் தனியார் மின்சுடலைகள் வழங்கிய ஒத்துழைப்பின் மூலம் தகனப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடிந்ததாக அவர் சொன்னார்.
கடந்த ஜூலை மாத த்துடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைமை அதிகம் மாறிவிட்டது. உடல்களை தகனம் செய்வதற்கான கால அவகாசம் மூன்று அல்லது இரண்டு நாட்களாக குறைந்து விட்டது. மின்சுடலைகளில் தகன நடவடிக்கைகளை மாலை 6.30 மணி வரை மேற்கொள்வதற்கு மாநில அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டதோடு இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்குரிய அடிப்படை வசதிகளை செய்து தந்தது என்றார் அவர்.
மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் நடைபெற்ற மின்சுடலைகளில் ஏற்படும் நெரிசலை சமாளிப்பதற்கான வழிகள் எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எனினும், நோய்த் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிப்பதற்காக அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக மற்றும் காஜாங் நகராண்மைக் கழக பகுதிகளில் மின்சுடலைகளை நிர்மாணிப்பதற்கு மாநில அரசு பரிசீலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோல சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூர் வட்டாரங்களில் பாரம்பரிய முறையில் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி இன்னும் மேற்கொள்ளப்படுதாக கூறிய அவர், இவ்விரு பகுதிகளிலும் நவீன மின்சுடலைகளை நிர்மாணிப்பது குறித்து தாங்கள் ஆலோசித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஷா ஆலம் மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக் கழகம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சிப்பாங் நகராண்மைக் கழகம் ஆகிய பகுதிகளில் மின்சுடலைகள் செயல்பட்டு வருகின்றன.








