ஷா ஆலம், ஜூன் 22- லோரி ஓட்டுநர் ஒருவரை உணவு விநியோகிப்பாளர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் ஷா ஆலம் மாவட்ட போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
உணவு விநியோக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 20 மற்றும் 25 வயதுடைய அவ்விருவரும் ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
செத்தியா ஆலம், ஜாலான் பெர்சியாரான் செத்தியா ஆலமில் நேற்று மாலை உணவு விநியோகிப்பாளர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லோரியும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநரை உணவு விநியோக நிறுவன பணியாளர்கள் அடங்கிய கும்பல் தாக்கியதாக அவர் சொன்னார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் இருவரை இதுவரை கைது செய்துள்ளோம். இதர சந்தேகப்பேர்வழிகளை தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டவரான லோரி ஓட்டுநரும் இச்சம்பவம் தொடர்பில் இன்று போலீசில் புகார் செய்துள்ளதாக ஏசிபி பகாருடின் கூறினார்.
இவ்விபத்து தொடர்பில் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவும் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்ட்டார்.








