ஷா ஆலம், ஜூன் 22- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான வான் போக்குவரத்து கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் காரணமாக அந்த கண்காட்சி வரும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனம் கூறியது.
இந்த கண்காட்சியை ஆகஸ்டு மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
‘சிலாங்கூர்- வர்த்தக மற்றும் பொது வான் போக்குவரத்து மையம்‘ எனும் கருப்பொருளிலான இந்த கண்காட்சியை சிலாங்கூர் மாநில அரசு, சிலாங்கூர் இன்வெஸ்ட் மற்றும் விண்வெளிப் பிரிவான எஸ்-டைகோ எனப்படும் விண்வெளி தொழில்துறை ஒருங்கிணைப்பு அலுவலகத்துடன் இணைந்து நடத்துகிறது.
பங்கேற்பாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த கண்காட்சி வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிக்கை ஒன்றில் கூறினார்.
இந்த கண்காட்சி சுபாங்கிலுள்ள ஸ்கைபார்க் விமான நிலையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 30 பங்கேற்பாளர்களையும் ஐயாயிரம் வருகையாளர்களையும் இந்த கண்காட்சி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கண்காட்சியின் வாயிலாக உள்நாட்டிலும் அனைத்துலக நிலையிலும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க முடியும்.








