கோம்பாக், ஜூன் 21- ஸ்ரீ கோம்பாக் பெரிங்கின் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்ட நோய்த் தொற்று எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட தேசிய அளவை விட அதிகமாகவே உள்ளது.
இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்ட 1,200 பேரில் எழுபதுக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் போது அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான இடங்களை இலக்காக கொண்டு மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
உதாரணத்திற்கு சுங்கை துவா மற்றும் கோம்பாக் செத்தியா தொகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆறு முதல் ஏழு விழுக்காடு நோய்த் தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
நேற்று 1,200 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் எழுபதுக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தேசிய அளவை தாண்டி ஆறு விழுக்காடாக பதிவாகியுள்ளது என்றார் அவர்.
நேற்று சுங்கை துவா, கேம்பாக் செத்தியா மற்றும் தாமான் டெம்ப்ளர் தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட இலவச கோவிட் பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதிக நோய்த் தொற்று பதிவான தொகுதிகள் மற்றும் தொழில்துறைகளை உள்ளடக்கிய மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்படும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 9 ஆம் தேதி கூறியிருந்தார்.








