கோலாலம்பூர், ஜூன் 21- கோவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களுக்கு மாநில, மாவட்ட எல்லைகளை கடப்பது உள்பட சில தளர்வுகளையும் சுதந்திரத்தையும் வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய நுட்பக் குழு இவ்விவகாரம் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
அந்த ஆய்வின் முடிவுகள் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சமர்பிக்கப்பட்டு இதன் தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
மற்ற நாடுகளில் பெறப்பட்ட தரவுகள் மீது ஆய்வு மேற்கொள்வது தவிர்த்து, இவ்விவகாரத்தை நாங்கள் மருத்துவ ரீதியாகவும் அணுகவிருக்கிறோம். தடுப்புசியை முழுமையாக பெற்றவர்களுக்கு பிற நாடுகள் வழங்கும் சுதந்திரத்தை கண்டறியவும் எத்தனை விழுக்காட்டினருக்கு அத்தகைய அனுமதி வழங்கப்படுகிறது என்பதை குறித்து ஆராயவும் விரும்புகிறோம் என்றார் அவர்.
உதாரணத்திற்கு, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்காக வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெற்ற சிலர் ஒரு அறையில் சந்திக்கும் போது அவர்கள் முகக்கவசத்தை அகற்றி விடலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என கைரி சொன்னார்.
நோய்த் தொற்றுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றவர்களை மைசெஜாத்ரா செயலி வாயிலாக கண்டறிய முடியும் எனக் கூறிய அவர், தடுப்பூசிக்கான கடப்பிதழாக மைசெஜாத்ரா செயலி ஒவ்வொருவருக்கும் விளங்கும் என்றும் குறிப்பிட்டார்.








