கோலாலம்பூர், மே 31- நாடு முழுவதும் பொருளாதார மற்றும் சமூகவியல் நடவடிகைகைளை முழு அளவில் மூடும் திட்டம் அமலாக்கம் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை முழு அளவில் அமல் செய்யப்படும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி கூறினார்.
எனினும், முன்களப் பணியாளர்கள், பாதுகாப்பு மற்றும் தற்காப்பு படையினர், அமலாக்க பிரிவினர் இதில் உள்ளட்டக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக பணியாளர்கள் மத்தியில் நெருக்கமான தொடர்பை தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து கூட்டங்களும் சந்திப்புகளும் இரகசியம் காக்கப்படும் வகையில் பாதுகாப்பான சூழலில் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரம், போலீஸ் நிலையங்கள், அனைத்துலக நுழைவாயில்கள், சுங்க மற்றும் குடிநுழைவுத் துறை ஆகியவை தவிர்த்து இதர அனைத்து முகப்பிட சேவைகளும் மூடப்பட்டு இயங்கலை வாயிலாக மட்டுமே சேவைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்க அலுவலகங்களில் அவ்வப்போது சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் விதிமீறல்கள் நிகழும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.








