MEDIA STATEMENT

சிவபாலன் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய சுயேச்சை விசாரணை தேவை- குணராஜ் வலியுறுத்து

23 மே 2021, 7:09 AM
சிவபாலன் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய சுயேச்சை விசாரணை தேவை- குணராஜ் வலியுறுத்து

கிள்ளான், மே 23- கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது  சிவபாலன் சுப்பிரமணியம் என்ற ஆடவருக்கு நேர்ந்த திடீர் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

அந்த ஆடவரின் மரணத்திற்கு போலீஸ் தரப்பும் காரணமா? என்பதை கண்டறிவதற்கு ஏதுவாக இந்த விசாரணையை சுயேச்சை அமைப்பு ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதற்காக மட்டுமின்றி அரச மலேசிய போலீஸ் படையின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்த சுயேச்சை அமைப்பின் விசாரணை அவசியம் என்று அவர் மேலும் சொன்னார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. தவறுகள் புரியும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டுமே தவிர உடல் ரீதியாக தாக்குதல் நடத்தக்கூடாது என்று கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை விசாரணைக்காக  கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவபாலன் சுப்பிரமணியம் என்ற பாதுகாவலர் விசாரணை அறையில் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமடைந்தது  தொடர்பில் குணராஜ் இவ்வாறு கருத்துரைத்தார்.

ஏ. கணபதி என்ற ஆடவர்  இதே மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மரணமடைந்த நான்கு வார காலத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.