கோலாலம்பூர், மார்ச் 29- கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு வசதி படைத்தவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியைத் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த தடுப்பூசிகளை வாங்கவும் செலுத்தவும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் வழி 80 விழுக்காட்டு மலேசியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசாங்கத்தின் இலக்கை விரைவாக அடைய முடியும் என்று சமூக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு கூறியது.
நோய்த் தாக்கம் அதிகம் இல்லாதவர்கள் தடுப்பூசியைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம், தடுப்பூசிக்கு எதிரான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைச் செய்யும் தரப்பினர் ஏற்படுத்தும் பாதிப்பு, நோய் தொற்றுப் பிரச்னையால் நீண்ட காலம் அவதியுறுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சலிப்பு ஆகியவை வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் 94 லட்சம் மலேசியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசாங்கத்தின் திட்டம் மீது சந்தேகம் ஏற்படுவதற்குரிய சூழலை உருவாக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை கூறினார்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டுமானால் கோவிட்-19 தடுப்பூசி சுயேச்சை ஆலோசக குழு சமூகம் மற்றும் சமயத்தை அடிப்படையாக கொண்ட அரசு சாரா அமைப்புகளின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். இது தவிர, தடுப்பூசி தொடர்பான அடிப்படையற்ற அச்சத்தை போக்குவதற்கு ஏதுவாக பல்வேறு மொழிகளில் தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கலாம் என்ற சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவின் எச்சரிக்கையை பொது மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 216 நாடுகள் பட்டியலில் மலேசியா தற்போது 45வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நோய்த் தொற்றின் மூன்றவாது அலையை உலகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது. இந்த மூன்றாவது அலை முந்தைய இரண்டு அலைகளை விட கடுமையானதாக இருக்கும் என அஞ்சப்படுகிறது என அவர் மேலும் சொன்னார்.








