ECONOMY

10,000 வெள்ளி அபராதம் நியாயமற்றது- டத்தோஸ்ரீ அன்வார் கருத்து

14 மார்ச் 2021, 3:17 AM
10,000 வெள்ளி அபராதம் நியாயமற்றது- டத்தோஸ்ரீ அன்வார் கருத்து

ஷா ஆலம், மார்ச் 14- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றாதவர்களுக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவு நியாயமற்றது என்று  எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் சிறிதும் கவலைப்படாததை இந்நடவடிக்கை காட்டுகிறது என்று அவர் சொன்னார்.

பொதுமக்களில் பலர் தற்செயலாகவோ குழப்ப நிலை காரணமாகவோ இத்தகைய தவறுகளைப் புரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

எஸ்.ஒ.பி. நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக இதுவரை 330 பேருக்கு தலா பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் நேற்று கூறியிருந்தார்.

‘தண்டனை வழங்குவதில் பாகுபாடான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதை இது மறைமுகமாக உணர்த்துகிறது. எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பகிரங்கமாக மீறும் அரசியல்வாதிகள், உயரிய அந்தஸ்து கொண்டவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தண்டனை அல்லது அபராதமின்றி தப்பிவிடுவதை காண முடிகிறது என்று அன்வார் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் பலர் வேலை இழந்து வருமானத்திற்கு வழியின்றி சிரமப் படுகின்றனர். அவர்களின் நிலையை அரசாங்கம் அனுதாபத்துடன் கவனிக்க வேண்டும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

ஆயிரம் வெள்ளி அபராதத்தைக்கூட செலுத்த முடியாமல் பலர் தவிக்கும் நிலையில் பத்தாயிரம் வெள்ளி அபராதத்தை எவ்வாறு செலுத்த முடியும் என்று அரசாங்கம் எப்போதாவது யோசித்ததுண்டா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.