MEDIA STATEMENT

போதைப் பொருள்-சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை இல்லை- போலீசாரின் மெத்தனப் போக்கு மீது அதிகப் புகார்கள்

27 டிசம்பர் 2020, 6:18 AM
போதைப் பொருள்-சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை இல்லை- போலீசாரின் மெத்தனப் போக்கு மீது அதிகப் புகார்கள்

கோலாலம்பூர், டிச 27- நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பை போலீஸ் துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் உறுப்பினர்களும் முறையாக நிறைவேற்றுவதில்லை என்பது தொடர்பில் அதிகமான புகார்களை அரச மலேசிய போலீஸ் படையின் உயர் நெறி மற்றும் தர கண்காணிப்புத் துறை (ஜிப்ஸ்) பெற்றுள்ளது.

தங்களுக்கு கிடைத்த புகார்களில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ள சூதாட்ட கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும் அடங்கும் என்று அத்துறையின் இயக்குநர் டத்தோ ஜம்ரி யாஹ்யா கூறினார்.

பொதுமக்கள் செய்யும் குற்றச்செயல்கள் தொடர்பான புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது மற்றும் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் நிகழும் குற்றச்செயல்களை கவனிக்காமல் விடுவது தொடர்பான புகார்களையும் தாங்கள் பெற்றுள்ளதாக சொன்னார்.

உதாரணத்திற்கு, சில மாவட்ட போலீஸ் தலைவர்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ள சூதாட்ட கும்பல்களுடன் நெருக்கமாக உள்ளதோடு அவர்களிடமிருந்து அனுகூலங்-களையும் பெறுகின்றனர். இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் புகார் அளித்தால், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு புகார் வரவில்லை எனக் கூறி சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் தலைவர்கள் விவகாரத்தை மூடி மறைத்து விடுகின்றனர் என்று டத்தோ  ஜம்ரி தெரிவித்தார்.

கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் கட்டொழுங்கு பிரச்னை தொடர்ந்து நிலவி வருகிறது என்றார் அவர்.

சட்டவிரோத கும்பல்கள் வழங்கும் அனுகூலங்களின் அளவும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. முன்பு சட்டவிரோத நான்கு இலக்க விற்பனை மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இணைய சூதாட்டங்களும் பொழுது போக்கு மையங்களும் அதிகரித்து விட்டன. அதனால் வழங்கப்படும் அனுகூலங்களின் அளவும் அதிகரித்து விட்டது என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, போதைப் பொருள் கும்பல்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருக்கும் தங்கள் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று புக்கிட் அமான்  போதைப் பொருள் தடுப்பு விசாரணைத் துறை இயக்குநர் டத்தோ ரசாருடின் ஹூசேன் கூறினார்.

போலீஸ் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் கெத்தும் போதை இலை விற்பனையில் ஈடுபட்டுள்ளதை நாங்கள் மறுக்கவில்லை. இதன் தொடர்பில் புகார் கிடைத்துள்ளதோடு சம்பந்தப்பட்டவர்கள்  மீது விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.