ஷா ஆலம், டிச 25- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சமயத்தினருக்கும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் துங்கு பெர்மைசுரி நோராஷிகின் தம்பதியர் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ அன்பர்களுக்கும் நானும் துங்கு பெர்மைசுரி நேராஷிகினும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். புத்தாண்டு முழுவதும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலைத்திருக்க இறைவனை இறைஞ்சுகிறோம் என்று சுல்தான் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவதன் வழி இந்த கிறிஸ்துமஸ் தினத்தை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பெருநாள் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வோம். தனித்துவத்துடன் நாம் புரிகின்ற காரியங்கள் அனைத்தும் அனைவரின் மனதிலும் இனிய தருணங்களாக என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் பல்லின மக்களிடையே காணப்படும் ஒற்றுமையும் ஒவ்வொரு குடும்பத்திலும் காணப்படும் சுபிட்சமான சூழலும் இந்த பெருநாளை புத்துணர்வுடன் கொண்டாடுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார் அவர்.








