ஷா ஆலம், டிச 7- இம்மாதம் 11 ஆம் தேதி கொண்டாப்படவிருக்கும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு 31 பேருக்கு உயரியவிருதுகளும் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.
விருதுகள் மற்றும் பட்டங்கள் பெறுவது தொடர்பில் 1,096 பேரிடமிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து இந்த 31 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநில
அரசின் தலைமை செயலாளர் டத்தோ அமின் முகமது ஆயா அறிக்கை ஒன்றில் கூறினார்.
அவரது அறிக்கையை சிலாங்கூர் மாநில தகவல் இலாகாவின் தலைமை இயக்குநர்
அலி சுஹாய்லில் வாசித்தார்.
'டத்தோஸ்ரீ' அந்தஸ்து கொண்ட ஸ்ரீ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்.பி.எம்.எஸ்.) எனும் உயரிய விருதை இருவர் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
'டத்தோ செத்தியா' மற்றும் 'டத்தின்ஸ்ரீ படுகா செத்தியா' அந்தஸ்து கொண்ட டத்தோ செத்தியா சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (எஸ்.எஸ்.ஐ.எஸ்.) விருதுக்கு இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
'டத்தோ' அந்தஸ்து கொண்ட டத்தோ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (டி.பி.எம்.எஸ்.) விருதை 11 பேர் பெறும் வேளையில் அதே 'டத்தோ' அந்தஸ்தை தாங்கி வரும் டத்தோ ஷராபுடின் இட்ரிஸ் ஷா (டி.எஸ்.ஐ.எஸ்.) விருது மேலும் 16 பேருக்கு வழங்கப்படுகிறது.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போராடி வரும் முன்களப் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட
உயரிய விருதுகளுக்கான கோட்டாவை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா நிறைவு செய்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விருதுகள் மற்றும் பட்டங்கள் பெறுவதற்காக 3,000 விண்ணப்பங்களை சிலாங்கூர் அரசு இவ்வாண்டில் பெற்றது. அவற்றில் 1906 விண்ணப்பங்கள் உயரிய விருதுகள் மற்றும்
பட்டங்களுக்கானவையாகும். சிலாங்கூர் அரசின் பதக்கங்களுக்காக 1,904 பேர்
விண்ணப்பம் செய்திருந்தனர்.
SELANGOR
சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு 31 பேர் உயரிய விருதுகளையும் பட்டங்களையும் பெறுகின்றனர்
7 டிசம்பர் 2020, 12:52 PM