புத்ராஜெயா, ஜன.2-
தேசிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ முகமது ஜுகி அலியும் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பாக்காரும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை அவரது அலவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
அச்சந்திப்பின் போது முகமது ஜுகியிடம் அவரது பதவி நியமனக் கடிதத்தை டாக்டர் மகாதீர் ஒப்படைத்த வேளையில், முன்னாள் தலைமைச் செயலாளர் தனது பதவி ஒப்படைப்பு கடிதத்தை முகமது ஜுகியிடம் வழங்கினார். அச்சந்திப்பிற்கு பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பொது சேவைத் துறை பணியாளர்கள் தொடர்ந்து மதிக்கப்படுவர் என்பது மீது பிரதமர் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக முகமது ஜுகி தெரிவித்தார்.
அதேவேளையில், மதிக்கத்தக்க வகையில் பொது சேவை துறையினர் தங்கள் பணிகளை மேற்கொள்வதும் விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் அவர்கள் சார்ந்த இலாகா மீது நம்பிக்கை வைப்பதும் அவசியம் என்று அவர் சொன்னார்.
இனி வரும் காலங்களில், எதிர்பாராத சவால்களை எதிர்கொள்வதற்கு பொது சேவை துறையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பர் எனத் தாம் எதிர்பார்ப்பதோடு அவர்கள் இத்துறையின் உறுதிமொழியையும் ருக்குன் நெகாரா கோட்பாடுகளையும் கடைப்பிடிப்பதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.








