ஷா ஆலம், ஆகஸ்ட் 28:
மலேசிய முதலீடு தரவரிசையில் 'தங்க மாநிலம்' என்ற முத்திரை பதித்தாலும், அதை பெருமிதம் கொள்ளாமல் ஆசியாவின் மற்ற மிகப் பெரிய நகரங்களுடன் போட்டியிட தயாராக இருக்கிறது என்றும் 2025-இல் விவேக நகரம் எனும் அந்தஸ்தை அடையும் நோக்கில் உந்துகோலாக அமையும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் (கெடிஎன்கெ) அதிக பங்களிப்பு கொடுக்கும் மாநிலம் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளும் வேளையில் ஆசிய ரீதியில் புதிய பரிணாமத்துடன் பயணிக்க மாநில அரசாங்க நிர்வாகம் தங்களை செம்மை படுத்திக் கொள்ள வேண்டும் என நினைவு படுத்தினார்.
ஜாகர்த்தா, சுரபாயா, சிங்கப்பூர் மற்றும் மணிலா போன்ற விவேக நகரங்களை உருவாக்க முயற்சியில் நாம் நேர்மறையான சிந்தனையில் செயல்பட வேண்டும் என்றும் சிலாங்கூர் மாநிலம் வட்டார ரீதியில் போட்டி ஆற்றலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
" கடந்த ஆண்டு நமது (சிலாங்கூர்) கெடிஎன்கெ பங்களிப்பு 23.7% ஆக உயர்ந்துள்ளது. 2017-இல் இந்த மதிப்பீடு 22.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநிலம் வட்டார ரீதியில் போட்டிடும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு மலேசிய நாட்டின் நற்பெயரை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன். இதுவே எதிர்காலத்தில் நாம் எதிர் நோக்கும் சவாலாக நான் கருதுகிறேன்," என்று அஜென்டா அவானி: சிலாங்கூர் பொருளாதார அபரீத வளர்ச்சி எனும் நேரலை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு அமிரூடின் ஷாரி பேசினார்.








